கடலலை
தாலாட்டும் அழகிய அன்னைநகர்

பங்கின் தகவல்களை மண்ணின் மைந்தர்களின் பார்வைக்கு கொண்டு வருவதற்காக
இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.வரலாறு

அன்னைநகர் பங்கின் உதயம்

                 பாரதத்தின் தென்கோடியில் முக்கடல்கள் சங்கமிக்கும் கன்னியாக்குமரியிலிருந்து சற்று மேற்கில் அரபிக்கடல் அருகே அமைந்த ஒரு சிறிய கிராமம் அன்னை நகர். உயர்ந்த தென்னை மரங்களால் சூழப்பட்ட இந்த அழகிய கிராமத்திற்கு ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக அழியாத உடலைக்கொண்ட புனித பிரான்சீஸ்கு சவேரியாரின் பொற்பாதங்கள் பதிந்த பூமி என்ற பெருமையும் இந்த மண்ணுக்கு உண்டு.

தற்போது அன்னை நகரென்று அழைக்கப்படும் இந்த கிராமம் 21.02.2000 வரை பள்ளம் பங்கின் ஒரு பகுதியாக இருந்தது. கிறிஸ்துவை அறியாது வாழ்ந்த கடலோர மக்களுக்கு கிறிஸ்துவை போதித்த புனித சவேரியார் 1538-ம் வருடத்துக்குப்பின் கடற்கரையோரமாக பூவாறு முதல் பள்ளம் வரையுள்ள மக்களுக்கு திருமுழுக்குக் கொடுத்து கிறிஸ்தவ மறையில் சேர்த்தார். இவ்வாறு கிறிஸ்தவம் தழுவிய மக்கள் ஆங்கிலேயர், போர்த்துக்கீசியர் போர்களாலும், அரசியல் காரணங்களாலும், துன்பங்களை சந்தித்தனர்.

    தற்போதுள்ள கோட்டாறு மறை மாவட்டம் 1930 வரை கொல்லம் மறைமாவட்டத்தின் ஒரு அங்கமாக இயங்கி வந்தது. மேதகு ஆயர் மரிய பென்ஸிகர் கொல்லம் ஆயராகப் பொறுப்பேற்றார். அந்தக் காலத்தில் பள்ளம் பங்கு புத்தன்துறை பங்குடன் இணைந்து கிளைப் பங்காக இருந்தது. பள்ளத்தில் புனித மத்தேயுவை பாதுகாவலராகக் கொண்ட சிற்றாலயம் ஒன்று இருந்ததாக நாம் அறிய முடிகிறது. மேதகு ஆயர் பென்ஸிகர் இந்த பகுதிக்கு வரும்போது மணக்குடி, பள்ளம், புத்தன்துறை மற்றும் ஊர்களுக்கு கால்நடையாகவே வருவதாக நமது முந்திய தலைமுறையினர் சொல்லக் கேட்டிருக்கிறோம். இவர் பொறுப்பிலிருந்த காலத்தில் ஊர்கள் தோறும் பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டு கல்வி கற்பிக்கப்பட்டதாகவும், பள்ளத்திலும் ஒன்று முதல் மூன்று வகுப்புகள் வரை நடைபெற்றதாகவும் அறிகிறோம்.

குருசடிகள் :

          குருக்கள் போதிய அளவு இல்லாத முற்காலத்தில் ஊரில் குருசடிகள் அமைத்து மக்கள் ஜெபித்து வந்தார்கள். பள்ளம் ஊரிலும் ஊரின் மேற்பகுதியிலும், புனித மத்தேயுவுக்கும் நடுப் பகுதியில் புனித இராயப்பருக்கும் ஊரின் கிழக்குப் பகுதியில் அற்புத நாயகிக்கு குருசடிகள் அமைக்கப்பட்டன. அன்னைநகர் பங்கு அமைவதற்கு வித்தாக அமைந்த அற்புத நாயகி குருசடி மற்றும் கல்லறைத்தோட்டம் கட்டுவதில் நமது மண்ணை சார்ந்த அ. பர்ணபாஸ் அவர்களின் பங்கு மகத்தானது. மக்கள் இரவு நேரங்களில் குருசடிக்கு முன்கூடி செபிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

ஆலயம் :

          ஊரின் மக்கள் தொகை பெருகவே சிற்றாலயம் இருந்த ஆலயத்தை பெரிதாகக் கட்ட மக்கள் திட்டமிட்டனர். எனவே, பெரிதான ஆலயம் ஒன்று கட்டத் தொடங்கினர். ஆலயம் அழகிய முகப்புகளைக் கொண்டு அழகுற அமைக்கப்பட்டது. (ஆலயத்தினுள் அமைக்கப்பட்டது). ஆலயத்தினுள் அமைக்கப்பட்ட கற்றூண்களையும், வாகன வசதியோ, இயந்திர வசதியோ இல்லாத அந்தக் காலத்தில் மக்கள் எவ்வாறு கொண்டு வந்து சேர்த்தார்கள் என்பது இப்போதும் வியக்க வைக்கிறது. முன்னோர்களின் உழைப்பும்,ஊக்கமும், ஆர்வமும் போற்றுதற்குரியது. இந்த சிறப்புமிக்க ஆலயம் 1921-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டதாக ஆலயத்தினுள் குறிக்கப்பட்டிருந்தது.

மக்கள் பெருக்கம் :

                  வருடங்கள் செல்லச் செல்ல மக்கள் தொகை அதிகமாகியது. அதன் விளைவாக ஊரின் அமைப்பும் விரிவடைந்து ஊரின் மேற்காக அமைந்த பகுதியை மேற்பகுதியானது கிழக்கே அமைந்த பகுதியை கிழக்குப் பகுதியென்றும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாயிற்று.

மறைமாவட்டம் :

கொல்லம் மாவட்டத்திலிருந்து கோட்டாறு ம் மாவட்டத்திலிருந்து கோட்டாறு மறைமாவட்டம் பிரிந்தபோது கோட்டாற்றில் ஆயர் லாரன்ஸ் பெரேரா பொறுப்பேற்றார்கள். இவருக்குப் பின் ஆயர் ஆஞ்ஞிசாமி ஆயரானார். அவர்களது ஆளுகையின் போது பள்ளம் புத்தன் துறை பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு தனிபங்காக ஆக்கப்பட்டது . முதல் பங்குப் பணியாளராக அருட்பணி பிரான்சீஸ் போர்ஜியோ பீட்டர்ஸ் நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து அருட்பணி  ஜோசப், அருட்பணி ஜெரோம் பெரஅருட்பணி ரிச்சர்ட் ரொசாரியோ, அருட்பணி தர்மநாதர், அருட்பணி பர்னபாஸ் நேவிஸ், அருட்பணி இராயப்பன், அருட்பணி செபஸ்டியான் பெர்னாண்டோ, அருட்பணி ஜோசுரெத்தினம், அருட்பணி ஜாண்போஸ்கோ, அருட்பணி ஜோசப் ஆஞ்சலா, அருட்பணி மரியசூசை, அருட்பணி பிரான்சிஸ் வின்சென்ட் ஆகியோர் பணியாற்றினர். அருட்பணி இராயப்பன் பங்கு தந்தையாக இருந்தபோது பள்ளிக்கூடத்தை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தி ஊரில் ஒரு கன்னியர் இல்லமும், சகாயமாதா மருத்துவமனையும் ஏற்படுத்தினார்கள்.

மக்கள் மனம்:

              பல்வேறு துறைகளில் ஊர் வளர்ச்சியடைந்த போதிலும் மக்களிடையே கிழக்குப் பகுதி (கீழ்பக்கம்), மேற்குப் பகுதி (மேல்பக்கம்) என்ற பாகுபாடு தலைதூக்கி கொண்டிருந்தது. சில காலங்களில் வேற்றுமைகள் தோன்றினாலும் அவை மறைந்து போவதும் மீண்டும் ஒற்றுமை போவதும் மீண்டும் ஒற்றுமை நிலவுவதுமாக இருந்தது. வருடங்கள் செல்லச் செல்ல வேற்றுமைகள் வளர்ந்து கொண்டிருந்தது. இதனால் சில கசப்பான நிகழ்வுகள் ஏற்படலாயிற்று. இதன் விளைவாக கிழக்குப் பகுதி மக்கள் ஆலயத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, கிழக்குப் பகுதி மக்கள் வேறு ஊர்களுக்கு திருப்பலிக்குச் சென்று வந்தனர். செல்ல முடியாத மக்கள் ஊரின் கிழக்குப் பகுதியில் அமைந்த அற்புத நாயகி குருசடியில் ஜெப வழிபாடுகள் செய்து வந்தனர்.

               திருப்பலியின்றியும், திருவருட்சாதனங்கள் இன்றியும் தவித்த மக்கள் ஒன்று சேர்ந்து ஆயர் இல்லம் சென்று எங்களுக்கு திருப்பலி வேண்டுமென்று முறையிட்டனர். பலமுறை சென்று போராடியதன் பயனாக ஆயர் லியோண் தர்மராஜ் அவர்கள் திருப்பலி நிறைவேற்ற சிலகாலம் ஆயர் இல்லத்திலிருந்து ஞாயிறுதோறும் குருக்களை அனுப்பினார்கள். திருப்பலி அற்புத நாயகி குருசடியில் வைத்து நிறைவேற்றப்பட்டு வந்தது. ஆயரின் அனுமதி பெற்று அற்புத அன்னையின் விழா செப்டம்பர் மாதம் 6, 7, 8 தேதிகளில் மூன்று நாட்கள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. கள் விழாவாகக் கொண்டாடப்பட்டது.

               1997-ஆம் ஆண்டு பள்ளம் பங்கில் அருட்பணி பிரான்சிஸ் எம். வின்சென்ட் பொறுப்பேற்றபோது கிழக்குப் பகுதி பள்ளம் பங்கின் கிளைப் பங்காக ஆக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.நீண்டகாலம் மறைக்கல்வி கற்க வாய்ப்பு இல்லாதிருந்த குறையை நீக்க நீக்க தந்தை வின்சென்ட் அவர்களின் முயற்சியால் ஆசியர்கள் நியமிக்கப்பட்டு மறைக்கல்வி நடைபெற்றது.மேலும் மூன்று நாட்களாகக் கொண்டாடி வந்த அன்னையின் விழாவை 10 நாட்கள் சிறப்பிக்கும்படி அனுமதி வழங்கினார்கள். தந்தையவர்களின் முயற்சியால் அற்புத அன்னை குருசடி சிற்றாலயமாக கட்டப்பட்டது . தந்தையவர்கள் மாற்றலாகி சென்றபின் மீண்டும் குழப்பங்களும், கருத்து வேற்றுமைகளும் தலைதூக்கலாயிற்று. கிழக்குப் பகுதி மக்கள் மீண்டும் ஆயரில்லம் சென்று போராடினார். தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர். குடும்பம் குடும்பமாகச் சென்று ஆயர் இல்லத்தின் முன்பு அமர்ந்து போராடினர். புரட்சிகளும், போராட்டங்களும் எல்லா இடங்களிலும் நடப்பதுண்டு. சில புரட்சிகள் தோல்வியை சந்திப்பதுண்டு. அன்னையின் பாதுகாவலிலுள்ள மக்களது போராட்டத்தின் பயன் ஒரு விடியலாக இருக்க அன்னை துணை நின்றாள். இதன் பயனாக அன்னை நகர் மக்கள் பள்ளம் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு கோட்டாற்றின் கிளைப்பங்காக இணைக்கப்பட்டது. கோட்டாறு பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி ஜான் போஸ்கோ ,இணை பங்குத்தந்தையான அருட்பணி ரொமால்ட் இவர்களின் முயற்சியால் முதன் முதலாக பங்குப் பேரவை அமைக்கப்பட்டது. தொடர்ந்து இணை தந்தையாக வந்த அருட்பணி எல் .செல்வராஜ் அவர்களின் முயற்சியால் புதிதாக அமையப்பெற்ற அற்புத அன்னை ஆலயத்திற்கான இடம் வாங்கப்பட்டது .

கிளைப்பங்கு:

    கடற்கரையோரமாயிருந்த அன்னையின் குருசடியில் அலையோசையின் ஆரவாரமும், கடலிலிருந்து வீசும் காற்றும் சுகமான ஓர் அனுபவமாக இருந்தாலும் சில வேளையில் மேகங்கள் மழையாக பூமிக்கு வரும்போது திருப்பலி நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. எனவே மக்களின் எண்ண ஓட்டத்தில் ஆலயத்தின் அவசியம் தோன்றலாயிற்று.

             இவ்வேளையில் அன்னை நகர் அசிசி பங்கின் கிளைப்பங்காக மாற்றப்பட்டது .அசிசி பங்குத்தந்தை அருட்பணி ஜோசப் பெனடிக்டும் மக்களும் இணைந்து கோவில் கட்டும் எண்ணத்தை செயலாக்கத் திட்டமிட்டனர். அதற்கான ஏற்பாடுகளை அப்போதிருந்த அருட்பணி பேரவையினர் ஆர்வமுடன் செயலாக்கினார். எனவே, அன்னை தன் மகன் ஏசுவோடு எழுந்தருளும் திருக்கோவிலுக்கு 04.07.2001-ல் மேதகு ஆயர் லியோன்தர்மராஜ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது . ஆனால் நிதி ஆதாரம் இல்லாத நிலையில் தந்தை பெனடிக்டின் முயற்சியால் 'உடுக்கை இழந்தவன் கைபோல' சரியான நேரத்தில் அசிசி பங்கு மக்கள் திரட்டிய ஒரு லட்ச ரூபாபை ஆதாரமாகக் கொண்டு அன்னை தன் மகன் ஏசுவோடு எழுந்தருளும் திருக்கோவிலுக்கு 04.07.2001-ல் மேதகு ஆயர் லியோன்தர்மராஜ் அவர்களால் அடிக்கல் போடப்பட்டது. அஸிஸி பங்கு மக்கள் அறுபது பேருக்குமேல் வந்து அன்னை நகர் மக்களோடு இணைந்து மகிழ்ந்தார்கள்.

புதிய பங்கின் உதயம்:

                     அன்னை நகரின் வரலாற்று ஏடுகளில் பொன்னால் பொறிக்க வேண்டிய நாள். இந்த நன்நாள். காலங்காலமாகக் கண்ட கனவுகள் நனவாகிய இனிய நாள். அது 28.05.2002 கிளைப்பங்காக இருந்த அன்னை நகர் பங்கு புதிய தனிப்பங்காக நியமனம் பெற்ற நாள். அன்று மேதகு ஆயர் லியோன் தர்மராஜ் அன்னை நகருக்கு வந்து புதிய பங்கை உருவாக்கி முதல் பங்குப் பணியாளராக அருட்பணி. ஆண்ட்ரூசை நியமனம் செய்தார்கள். மக்கள் மனம் பூரித்து மகிழ்ச்சியில் திளைத்தார்கள். கல்லிலும், முள்ளிலும், பாலைவனத்திலும் 40 ஆண்டுகள் கால்நடையாக நடந்து களைத்தை இஸ்ரேயல் மக்கள் கானான் நாட்டை வந்தடைந்தபோது அடைந்த மகிழ்ச்சியைப் போன்றதொரு மகிழ்ச்சியை மக்கள் அடைந்தார்கள். அன்னையின் அடைக்கலத்தில் வாழ்ந்த மக்கள் அன்று அடைந்த மகிழ்ச்சியை எழுத்து வடிவத்தில் சொல்லிவிட முடியாது. இறைவனுக்கு நன்றி கூறி இறைவனைப் போற்றினர். அன்னை நகர் கிளைப் பங்கு தாய்ப்பங்காகிய பள்ளம் பங்கிலிருந்து பிரிந்தபோது சில உரிமைகளையும் இழக்க நேரிட்டது.

முதல் பங்குப் பணியாளர்:

            புதிய பங்கு உதயமான அன்று பொறுப்பேற்ற அருட்பணி ஆண்ட்ரூஸ் அவர்களுக்கு இதுவே முதல் பங்காக இருந்தது. வயது குறைவாக இருந்தாலும் முதிர்ந்த ஆற்றலுடன் ஆறு ஆண்டுகள் இப்பங்கில் பணிபுரிந்தார்கள். எதற்கும் அலட்டிக் கொள்ளாத அமைதியுடையவர்.

                   பங்கு அருட்பணி பேரவையை மெருகூட்டி பேரவையோடு இணைந்து செயலாற்றினார்கள். இறைவழிபாட்டில் ஈடுபாடும், பொருள் நிறைந்த மறையுரையம் தருபவர், இனிய பாடல்களால் பக்தியை தூண்டி எழுப்பும் இசை வல்லுனர். மறைக்கல்வி முதலிடம் தந்து கண்போன்று காத்தவர்.    நல்லாயன் தன் ஆடுகளுக்குத் துன்பம் வரும்போது ஆடுகளை விட்டுவிட்டு ஓடுவதில்லை என்ற நற்செய்திக்கு ஏற்ப 2004 டிசம்பர் 26-ம் தேதி சுனாமி என்னும் ஆழிப்பேரலை வந்து ஊரைத் தாக்கியபோது மக்களையெல்லாம் பாதுகாப்பான இடங்களுக்கு போகும்படி அனுப்பிவிட்டு கடைசியாக நின்றபோது பேரலைத் தாக்கத்தில் அகப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு இறையருளாலும் அற்புத அன்னையின் பாதுகாப்பாலும் புது உயிராக மீட்கப்பட்டவர்கள். சுனாமி தாக்கத்துக்குப் பின் தனியார் நிறுவனங்கள் வழியாகவும் அரசிடம் இருந்தும் மக்களுக்கு உதவிகளை பெற்றுத்தர அயராது உழைத்தார்கள். ஆஸ்டிரியாவில் இருந்து கிடைத்த உதவியால் பள்ளிக்கூடம் கட்டினார்கள். ஆயரிடம் உதவி பெற்று குருக்கள் தங்கும் இல்லத்தை வசதிபட விரிவுபடுத்தினார்கள்.

தந்தை பங்குப் பொறுப்பு ஏற்றபோது அஸ்திவாரமிட்ட நிலையிலிருந்த ஆலயப் பணியை தொடர்ந்து கட்டி வந்தார்கள். பலரிடம் நன்கொடைகளைப் பெற்று ஆலயப் பணியை ஆர்வமாக மேற்கொண்டு மேற்கூரை உச்சியிலுள்ள கோபுரம் வரை முடிக்கப்பட்டது. மக்களோடு இணைந்து சித்தாள் வேலையும் செய்தார்கள். பொறுப்பேற்ற நாளிலிருந்து மாற்றலாகிச் செல்லும்வரை ஆலயப் பணியை ஆர்வமுடன் செய்தார்கள். ஆறு ஆண்டுகளில் அறுபது ஆண்டுக்கான வளர்ச்சி காணும்படி அன்னை நகரை உயர்த்தினார்கள்.

         அருட்பணி. ஆண்ட்ரூஸ் மாற்றலாகிச் சென்றபின் அன்னை நகருக்கு அருட்பணி. அருள் ஜோ பங்குப் பணியாளராக நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் ஓராண்டு காலம் பங்கில் பணியாற்றினார்கள். வழிபாடுகளை நல்ல ஈடுபாட்டோடு செய்வதிலும் ஒப்புரவு அருள் சாதனத்தின் மீது மக்களுக்கு ஈடுபாடு உண்டாகும்படி அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ஒப்புரவு அருள் சாதனம் பெறவைத்தார்கள். ஓராண்டு பணியாற்றியபின் மாற்றலாகிச் சென்றார்கள்.

2009-ம் ஆண்டு, மே மாதம், 21-ம் தேதி அன்னை நகரின் பங்குப் பணியாளராக அருட்திரு.அ. செல்வராஜ் அடிகள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். நல்ல முதிர்ந்த அறிவும், அனுபவமும் உள்ளவர்கள். மக்களோடு இனிமையாக பேசும் தன்மை உடையவர்கள். வழிபாடுகளை அர்த்தமுள்ள விதத்தில் பக்தி நிரம்ப நிறைவேற்றி வருகிறார்கள். பங்குத் தந்தையாகப் பொறுப்பேற்று இரண்டாவது மாதத்தில் கோவில் அர்ச்சிப்பு நடைபெறுகிறது.

     அன்னை நகரில் தனிப்பங்கு உருவாக அயராது உழைத்த இப்பங்கிலுள்ளோர்க்கும், மோசேயைப்போல இம்மக்களோடு பயணித்து வழிநடத்திய அனைத்து அருட்பணியாளர்களுக்கும் நன்றி கூறுகிறோம்.

புள்ளியியல்

2013

ஆண்கள்
பெண்கள்
மொத்தம்
குடும்பங்கள்

பங்கின் உதயம்

கோட்டார் பங்கின் கிளை பங்கானது

26-01-2000

முதல் பங்குப்பேரவை

23-07-2000

அசிசி பங்கின் கிளை பங்கானது

24-05-2001

ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

07-12-2001

தனிப்பங்காக உதயமானது

28-05-2002

முதல் பங்குத்தந்தையாக Fr.ஆன்ட்ருஸ்.T

This is the content of the last section

28-05-2002

பங்குத்தந்தையின் இல்லம் அடிக்கல் நாட்டப்பட்டது

16-11-2003

பங்குத்தந்தையின் இல்லம் அர்ச்சிக்கப்பட்டது

01-02-2004

அற்புத அன்னை பள்ளி கட்டிடம் திறப்பு

24-07-2005

இரண்டாவது பங்குத்தந்தையாக Fr.அருள் ஜோசப்.D

22-05-2008

மூன்றாவது பங்குத்தந்தையாக Fr. செல்வராஜ்

29-05-2009

அற்புத அன்னை மழலையர் தொடக்கப்பள்ளி ஆரம்பம்

03-06-2009

அற்புத அன்னை ஆலயம் அர்ச்சிப்பு

06-07-2009

பெத்தானி அருட்சகோதரிகளின் வருகை

28-05-2010

நான்காவது பங்குத்தந்தையாக Fr.நித்திய சகாயம்.E

29-01-2011

பெத்தானி ஆங்கிலப்பள்ளி ஆரம்பம்

12-04-2012

ஐந்தாவது பங்குத்தந்தையாக Fr.விஜயன் ராஜன் பாபு.A

14-0502013

அன்னை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்

30-08-2013

அற்புத அன்னை மக்கள் வங்கி ஆரம்பிக்கப்பட்டது

08-09-2-13

தொடர்புக்கு

கடலலை தாலாட்டும் அழகிய அன்னைநகர்.

+91 96599 21157